யாக்குப் உண்மையில் கைதா? சரணா? நீதி செத்ததா?
யாக்குப் உண்மையில் சரணடையும் இல்லை அவர் சி.பி.ஐயால் தில்லியில் கைது செய்யப்படவும் இல்லை. நீதியும் சாகவில்லை. எப்படி?

என்னுடைய முந்தைய கட்டுரையில் யாக்குப் சரணடைந்தார் என்று எழுதியிருந்தேன். அது என்னுடைய பிழையா அல்லது நான் படித்த கட்டுரைகளின் பிழையா என தெரியவில்லை. இருப்பினும் அதை என்னுடைய பிழையாகவே கருதி என்னுடைய முந்தைய பதிவை நீக்கிவிட்டேன். உங்களுக்கு தவறான தகவல் தந்தமைக்கு மன்னிக்கவும். ராமனின் கட்டுரையை படிக்கும்பொழுதுதான் எனக்கு உண்மை தெரிந்தது.
பல அரசியல் தலைவர்களும் பத்திரிக்கைகளும் யாக்குப் சரணடைந்ததாகவே கூறுகின்றனர். அது தவறான செய்தி.
உண்மையில் என்ன நடந்தது என்றால்.....
யாக்குப் சரணடையலாமா வேண்டாமா என்று ஆலோசிப்பதற்காக நேபாளத்தில் தன்னுடைய வழக்கறிஞரை சந்திக்க வந்துள்ளார். அவருடைய வழக்கறிஞர் சரணடைய வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் அவர் மீண்டும் கராச்சி செல்ல முயல்கிறார். காத்மாண்டு விமானநிலையத்தில் சந்தேகத்தின் பேரில் காவலர்கள் இவரை பிடித்து விசாரித்து இவரை கண்டறிந்து இந்தியாவிற்கு அனுப்புகின்றனர். நேபாள காவலர்களின் உதவியால் தான் அவர் தில்லிக்கு கொண்டுவரப்பட்டார் என்பதை மறைத்து தாங்கள் தான் தில்லியில் யாக்குபை கைது செய்தோம் என்று சி.பி.ஐ கூறிவிட்டது. நேபாள கதையை மறைத்தது சி.பி.ஐ செய்த குற்றம்.
யாக்குப் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை சரணடைய வைத்துள்ளார். மேலும் விசாரணையில் பல தகவல்களை தந்து உதவியுள்ளார். இதன் அடிப்படையில் தான் ராமன் இவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது சரியா என்ற கேள்வி எழுகிறது என்று கடிதம் எழுதி அதில் பிரசுரிக்க வேண்டாம் என்று எழுதி அனுப்பிவிட்டு பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய கடிதத்தில் இருக்கும் செய்திகளை நீங்கள் உங்கள் கட்டுரைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார்.
ராமனின் மடலை வைத்து கொண்டு ரெடிப் இணையதளத்தில் சீலா பட் எழுதிய கட்டுரைகள் பல செய்திகளை தந்தாலும் குழப்பத்தையும் தருகிறது. இவரின் கட்டுரையும் யாக்குப் சரணடைந்தார் என்றும்...கைது செய்யப்பட்டார் என்றும் குழப்புகிறது.
இந்த இடத்தில் விசாரணையில் நேரடியாக தொடர்பில் இருந்த ராமனின் மடலை மட்டுமே நாம் ஆதராமாக கொள்வது சரியாக இருக்கும்.
ராமன் அவர்கள் எழுதிய கடிதத்தில் யாக்குப் சரணடைந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. யாக்குபை நேபாளத்திலிருந்து இந்தியா கொண்டு வரும் பணியை இவர்தான் ஒருங்கிணைத்துள்ளார். நான் மேலே அடர்த்தியான எழுத்துக்களில் எழுதியது ராமனின் மடலில் இருந்து எடுத்தவைதான்.
சரி இந்த வழக்கில் நீதி செத்ததா?
1. சி.பி.ஐ யாக்குபை தில்லியில் கைது செய்ததாக கூறியது உண்மைதான். ஆனால் நேபாள காவலர்கள் உதவியதை கூற மறுத்தது தவறுதான். யாக்குப் தான் நேபாளத்தில் கைது செய்யப்பட்டதாக கூறுவதும் உண்மைதான். ஆனால் அவர் அதிகாரப்பூர்வமாக நேபாள காவல்துறையால் கைது செய்யப்படவில்லை.(யாக்குப் தானாக சரணடைய வில்லை என்பது இங்கே தெளிவாகிறது.)
நேபாளத்தில் அவரை கைது செய்தால் அவரை நேபாள நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும். அங்கே அவரை ஒப்படைத்தால் தாவூத்தால் அவர் விடுவிக்கப்படலாம் அதனால் அவர் தப்பிவிடுவார் என்பதால் இந்திய நேபாள காவல்துறையினர் இவ்வாறு நடந்துகொண்டனர் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
3. யாக்குப் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சரணடைய உதவி புரிந்துள்ளார். மேலும் தாவூத், டைகர் மேமன் (யாக்குபின் சகோதரர்...இவர்கள் முக்கிய குற்றவாளிகள் ) இவர்களை பற்றிய சில தகவல்களையும் தந்துள்ளார். ஆனால் நீதிமன்றத்தில் இவர் குடும்பத்தை சரணடைய வைத்த உண்மையை யாக்குபும் சரி, அவரது வழக்கறிஞரும் சரி சொல்லவில்லை. இதை நீதிமன்றத்தில் கூறி இருந்தால் அவருக்கு தூக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என்று ராமன் கருதினார். ஆக இந்த இடத்தில் யாக்குபும் அவரது வழக்கறிஞரும் தவறு செய்துள்ளது தெரியவருகிறது.
4.அதிமுக்கியமாக குண்டுவெடிப்பில் யாக்குப் மிகப்பெரும் பங்கு வகித்ததாக நீதிமன்றம் கருதுகிறது. டைகர் மேமன் கொடுக்கும் உத்தரவுகள் இவர் மூலமாகவே சில நேரங்களில் குண்டு வைத்தவர்களுக்கு சென்றுள்ளது.இவர் இல்லை என்றால் இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நீதிமன்றம் கருதுகிறது. இவர் குண்டுவெடிப்புக்கு பல உதவிகள் புரிந்துள்ளார். இதனால் தான் இவருக்கு தூக்கு தண்டனை தரப்படவேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும் இவர் செய்த குற்றத்திற்கு வருந்தவும் இல்லை தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை.
5. யாக்குப் தான் குற்றம் செய்யவில்லை என்று கடைசி வரை கூறுகிறார். ஆனால் நீதிமன்றம் இவர் குற்றம் செய்ததற்கான பல ஆதாரங்களை தருகிறது. அவர் குற்றமவர் என்று கூறும்படி அவரும் அவரது வழக்கறிஞரும் ஒரு ஆதாரத்தை கூட வைக்கவில்லை. ராமனும் இவர் நிரபராதி என்று கூறவில்லை.
ராமனின் மடல் மற்றும் உச்ச நீத்மன்றத்தின் தீர்ப்பு நகலையும் வைத்து பார்க்கும்பொழுது யாக்குப் சரணடையவில்லை என்பதும் அவர் குற்றம் புரிந்துள்ளார் என்பதும் தெரியவருகிறது. ஆதலால் நீதியும் செத்ததாக கூற இயலாது. 257 பேரை கொல்ல 700 பேர் காயமுற காரணகர்த்தாவாக இருந்தவருக்கு மரண தண்டனை விதித்தது சரியா தவறா என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகின்றேன்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்து பார்த்தால் அவர்கள் எடுத்த முடிவு சரி என்றே எனக்கும் படுகிறது.
நீதி நிச்சயம் சாகவில்லை. இதே வழக்கில் பலருக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ளார்கள். யாக்குப் செய்த குற்றத்தின் அளவை பொறுத்தே அரிதினும் அரிதான தூக்கு தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பார்வைக்கு ராமனின் கடிதத்தையும் (இங்கே) உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலையும் (இங்கே) தந்துள்ளேன்.
இசுலாமிய தலீத் மக்களை உசுப்பிவிடும்படி பலர் பேசுவதும் எழுதுவதுமாக உள்ளனர். அவர்களும் என்னைப்போலவே உண்மை தெரியாமல் இருந்திருக்கலாம். இதை வாசித்த பிறகாவது தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
என்றும் உண்மையுடன்
இராச.புரட்சிமணி 

Post a Comment

 
Top