கொல்லான் பொய்கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் நியமத்து இடையில் நின்றானே!
- திருமந்திரம்
கொல்லான் - எந்த உயிரையும் கொல்லாதவன்
பொய்கூறான் - பொய் சொல்லாதவன்
களவிலான் - பிறர் பொருளைக் கவராதவன்
எள்குணன் - அளவாக உண்பவன்
நல்லான் - நல்லதை செய்பவன்/ பொறுமை உடையவன்
அடக்கம் உடையான் - தன்னடக்கம் கொண்டவன்
நடுச்செய்ய வல்லான் - விருப்பு வெறுப்பு அற்றவன்
பகுத்து உண்பான் - பிறருக்கு கொடுத்து உண்பவன்
மாசிலான் - குற்றம் அற்றவன்
கள்காமம் இல்லான் - காமம் அற்றவன்
இந்த பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

கொல்லாமை, பொய்யாமை, விருப்பு-வெறுப்பு, இல்லாமை, கரவாமை, மாசு இன்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, களவாமை, பகிர்ந்து உண்பது என்னும் பத்தும் இயமம் எனப்படும். திருக்குறளில் உள்ள பல குறள்களின் தொகுப்பே இப்பாடல். கொல்லாமை, பொய்யாமை (வாய்மை), கள்ளாமை, வெகுளாமை, காமம் இன்மை (கூடா ஒழுக்கம்) என்னும் இப்பாடலில் சொல்லப்பட்ட ஐந்தும் திருக்குறளில் 'துறவறம்' என்னும் தலைப்பின் கீழ் வருகின்றன.
கரவாமை (ஈகை) என்பது திருக்குறளில், இல்லறம் என்ற தலைப்பின் கீழ் வருகிறது. நிரம்ப உண்ணாமை, கள்ளுண்ணாமை எனும் இரண்டும் பொருட்பால் எனும் தலைப்பின் கீழ் வருகின்றன. திருமூலரும் திருவள்ளுவரும் ஏன் ஒரே மாதிரியாகச் சொல்ல வேண்டும்? மேலும், நல்லவற்றைத் திரும்பத் திரும்பச் சொன்னால்தான் அவை மனத்தில் பதியும். அதன் காரணமாகவே திருமூலரும் திருவள்ளுவரும் அப்படி ஒன்றுபோலச் சொன்னார்கள்.

Post a Comment

 
Top