Acacia+niloticaதமிழ்நாட்டில் எல்லோருடைய மனதிலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும், தமிழ்நாட்டின் வளத்தையே பாதிக்கும் ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாணும் முதல் நடவடிக்கைக்கான வாசலை மதுரையில் உள்ள ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் திறந்துவிட்டுள்ளனர். இது இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை பெருக்கெடுத்து ஓடவைத்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் எங்கும் பயனில்லாமல் நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுத்துக் கொண்டிருக்கும் சீமை கருவேலமரம், சீமைஒடை, வேலிகாத்தான் போன்ற பல பெயர்களில் கோரமாக உலா வந்துகொண்டிருக்கிறது. இந்த கெடுதி விளைவிக்கும் மரங்களை வைகை ஆற்று படுகையில் இருந்து பூண்டோடு அழிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. வைகை ஆற்று பகுதியில் இந்த சீமை கருவேல மரங்களை அகற்ற கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்தபோது, அரசுதரப்பில் இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு நீதிபதிகளின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.
வைகை ஆற்றின் படுகையிலிருந்து சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு உத்தரவு பிறப்பித்ததற்காக திருப்தி தெரிவித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து நதிகள், நீர்நிலைகளிலும் மேற்கொள்ளவேண்டும் என்று சமுதாய நோக்கில் ஒரு சிறந்த கருத்தை கூறியுள்ளனர். மேலும், இதுபோல சீமை கருவேல மரங்களை அழிக்கவேண்டும் என்று தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து தங்கள் முன்னிலையில் திங்கட்கிழமை கொண்டு வரவேண்டும் என்று பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ஆக, இவ்வளவு நாளும் விடைகாண முடியாத நிலையில் இருந்த சீமை கருவேல மர பிரச்சினைக்கு இனி சாவு மணியை நீதிபதிகள் அடித்து விடுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.
பொதுவாக ‘‘மரம் வளர்ப்போம், மழை வளம் பெறுவோம்’’ என்பதுதான் நீர்வளத்தைப் பெருக்க எடுக்கப்படும் உறுதிமொழியாகும். ஆனால், சீமை கருவேல மரம் இருந்தால் நீர்வளம் அடியோடு போய்விடும் என்பது உலகம் முழுவதும் இப்போது அறிந்த உண்மையாகும். இதன் விஷத்தன்மை தெரியாமல் 1950–ம் ஆண்டுகளில் விறகுக்கு பயன்படும் என்று இந்த மரத்தின் விதைகள் தூவப்பட்டன. ஒரு சீமை கருவேலமரம் தனது வேர்களை நீண்ட தூரத்துக்கு ஆழமாகவும், அகலமாகவும் பரப்பி நிலத்தடி நீரை உறிஞ்சிவிடுகிறது. போதாக்குறைக்கு காற்றில் உள்ள நீர்ப்பதத்தையும் உறிஞ்சிவிடுகிறது. எல்லாமரங்களும் காற்றில் உள்ள கரியமில வாயுவை கிரகித்து மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியேவிடும். ஆனால், சீமை கருவேலமரம் மட்டும் ஆக்சிஜனை கிரகித்து கரியமில வாயுவை வெளியேவிடும். எந்த பறவையும் இந்த மரத்தில் கூடுகட்டாது. இதன் அடியில் வேறு புல் பூண்டுகளோ, செடிகளோ வளராது. இந்த மரத்தில் ஆடு, மாடுகளைக் கட்டினால் மலடாகிவிடும் என்று விவசாயிகள் கட்டுவதில்லை. இந்த மரத்தின் கேட்டை அறிந்த காரணத்தால்தான், கேரளாவில் போர்க்கால நடவடிக்கை எடுத்து சீமை கருவேல மரத்தை அடியோடு அழித்துவிட்டார்கள். தமிழ்நாட்டிலும் 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30–ந் தேதி இந்த சீமை கருவேல மரத்தை அழிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியும், அதிகாரிகளின் மெத்தனத்தால் அது செயல்படுத்தப்படவில்லை. மீண்டும் அரசு சார்பில் கடுமையான உத்தரவை பிறப்பித்து வெறுமனே வெட்டுவதோடு இல்லாமல், கேரளா போல பூண்டோடு அழிக்கவேண்டும்.dworldforum.com

Post a Comment

 
Top