ஜோதிடம் எனும் தேவரகசியம்- 15
முழுநிலவு ரகசியங்கள்
அதேபோல நீசமடைந்த ஒரு கிரகம் தனது வலிமையைத் திரும்பப் பெறும் நீசபங்கம் எனும் அமைப்பிற்கு காரணமான வரும் சந்திரன்தான். சூரிய ஒளியைப் பெற இயலாத நிலையில் கிரகங்கள் நீசம் எனப்படும் வலிமை குன்றிய நிலையை அடைகின்றன. சந்திரன் மூலமாக அதை வேறு வழிகளில் பெறும்போது இழந்த வலுவை மீண்டும் அடைகின்றன.
சந்திரனுக்கு 1,4,7,10-ல் இருந்து சந்திரனால் பிரதிபலிக்கப்பட்ட சூரிய ஒளியைப் பெறும் கிரகம். இழந்த தன் ஒளியைக் கடன் வாங்கி வலிமை பெறுகிறது என்பதைத்தான் ஞானிகள் சந்திர கேந்திரத்தில் நீசமடைந்தவன், நீசபங்கம் அடைவதாகக் கூறினார்கள்.
அதேநேரத்தில் சந்திரனே நீசமடைந்தால் என்ன செய்வது? ஒரு விசித்திர நிலையாக செவ்வாய் ஒருவர் மட்டுமே தன் வீட்டில் நீசம் பெறும் இரண்டு கிரகத்துடனும் நீச உச்ச நிலைகளில் பரிவர்த்தனை பெறுவார்.
அதாவது சந்திரன் விருச்சிகத்தில் நீசம் பெறும் நேரத்தில் விருச்சிக நாதன் செவ்வாய் கடகத்தில் இருந்தால் அவரும் நீசம் பெறுவார். இந்த நிலை நீசப் பரிவர்த்தனை ஆவதால் இவ்வாறு இருக்கும் இருவருமே பங்கம் பெற்று நீசபங்க நிலையை அடைவார்கள். சனி மேஷத்தில் நீசம் பெறும் நிலையில் செவ்வாய் சனியின் வீடான மகரத்தில் உச்சம் பெற்றிருந்தால் இருவரும் பரிவர்த்தனை அடைந்து சனியின் நீசநிலை பங்கம் பெறும்.
அடுத்து இன்னொரு விதிவிலக்கு நிலையைப் பற்றிச் சொல்கிறேன்.
நீசம் என்பது ஒளியிழந்த நிலை என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்பதால் வைகாசி மாதம் விருச்சிக ராசியில் பிறந்தவருக்கு சந்திரன் நீசம் என்று கணக்கிட்டுப் பலன் சொல்லி விடாதீர்கள்.
அப்போது முழு பவுர்ணமி நிலை என்பதால் சூரியனுக்கு நேர் எதிரே இருக்கும் சந்திரன் தனது முழு வலிமையுடன் இருப்பார் என்பதைப் புரிந்து கொள்வதோடு அந்த நிலையின் விசாகம் நான்காம் பாதம் ஒரு இறையின் அவதார நாள் என்பதையும் உணர்ந்து கொண்டீர்களானால் உச்ச நீச நிலைகளை கணக்கிடும் முறையும் ஜோதிடத்தில் சூரிய சந்திரர்களின் பங்கை உணரும் ஆற்றலும் உங்களுக்குப் பிடிபட்டு விடும்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
சந்திராஷ்டமம் என்ற சொல்லுக்கு சந்திரன் எட்டில் இருப்பது என்று பொருள்.
ஒரு கிரகம் எட்டில் இருக்கும் போது தனது வலிமையை இழக்கின்றது என்பதை அறிந்த நமது ஞானிகள் கோட்சார நிலையில் ஒருவரின் ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் மறையும் இரண்டேகால் நாட்களை சந்திராஷ்டம நாட்கள் என்று குறிப்பிட்டு அந்தநாட்களில் முக்கியமான முடிவுகளையோ புதிய முயற்சிகளையோ நீண்ட பிரயாணங்களையோ செய்ய வேண்டாம் என நமக்கு அறிவுறுத்தினார்கள்.
இதன் உண்மைக் காரணம் என்னவெனில் சந்திரன் மனதிற்கும் மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பதால் இந்த நாட்களில் மனம் தெளிவற்ற நிலையில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் உங்களால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது என்பதுதான்.
இந்த சந்திராஷ்டம நிலைக்கும் சில விதிவிலக்குகள் நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. குருபகவானின் பார்வையையோ சேர்க்கையையோ சந்திரன் பெறும் நாட்களில் ஒருவருக்கு சந்திராஷ்டம நாட்களின் கெடுபலன்கள் இருக்காது என்பது அவற்றில் ஒன்று.
சந்திரனின் நீச நிலையை நான் விளக்கியது சந்திராஷ்டம நிலைக்கும் பொருந்தும் என்பதால் சூரிய ஒளியைப் பெற்று முழுவலிமையுடன் சந்திரன் இருக்கும் நாட்களிலும் சந்திராஷ்டமம் வேலை செய்யாது.
Post a Comment