துரோகத்தின் ஒப்புதல் வாக்குமூலம்!
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவும் எவ்வளவு கொடுரமானவர்கள் என்பதும் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்கு தெரிந்தது."
"பிரபாகரனின் சடலத்தைப் பார்த்தபோது, என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு வேதனை ஏற்பட்டது."
- கருணா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும். இருப்பினும், அவரை எவ்வாறு கைது செய்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட பிரபாகரன், மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை மஹிந்த கடுமையாக தாக்கியுமுள்ளார் என அவரது ஆட்சியில் இருந்த பிரபல அரசியல்வாதிகள் இருவர் என்னிடம் தெரிவித்தனர் என்று புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'நான் அறிந்தளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஆர்.சம்பந்தன், நேர்மையான அரசியல்வாதியாவார். யதார்த்தவாதியாகச் செயற்படக்கூடியவர். அதேபோலவே, தமிழ் மக்களுக்கான எதையேனும் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர் சுமந்திரன். இருப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்த சிலர், மக்களுக்கான நலன்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்ததே. இவை தொடர்பில் கதைப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வக்காலத்து வாங்கும் நபராக என்னை எவரும் எண்ணிவிடக் கூடாது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மீது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் மரியாதை கொண்டுள்ளார். அது தொடர்பில் நான் நன்கு அறிவேன். அதேபோல், புலிகள் இயக்கம் தொடர்பில் சம்பந்தன் ஐயாவுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. இருப்பினும், புலிகள் இயக்கத்தினால் தனக்கோ அல்லது தன்னுடைய சக அரசியல்வாதிகளுக்கோ ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடலாம் என்ற அச்சம் காரணமாகவே புலிகள் அமைப்பின் கட்டளைகளுக்கேற்ப அவர் செயற்பட்டார் என்பதை நான் அக்காலத்திலேயே அறிந்திருந்தேன்.
விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதால் தான், இன்று தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதி யுத்தத்தின் போது புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும். இருப்பினும், அவரை எவ்வாறு உயிருடன் கைது செய்தார்கள் என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், என்னை அழைத்துச் சென்று சடலத்தைக் காண்பித்தார்கள். பல்வேறு சித்திரவதைகளுக்குப் பின்னரே அவர் கொல்லப்பட்டார் என்பதை அவரது சடலத்தைப் பார்த்தவுடனேயே நான் அறிந்துகொண்டேன். பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள், அதன் உண்மை குறித்து என்னிடம் விசாரித்தார்கள். அப்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால், பிரபாகரனின் சடலத்தைப் பார்த்தபோது, என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு வேதனை ஏற்பட்டது. இருப்பினும், இனி தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்பனை எண்ணி என்னுடைய அந்த வேதனையை தாங்கிக்கொண்டேன்.
பிரபாகரனின் சடலத்தைப் பார்த்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் கடந்த போது, உயிருடன் கைது செய்யப்பட்ட பிரபாகரன், மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் பிரபாகரனை அவர் கடுமையாகத் தாக்கினார் என்றும் அவரது ஆட்சியில் இருந்த பிரபல அரசியல்வாதிகள் இருவர் என்னிடம் தெரிவித்தனர். இது தொடர்பில் நான் ஒருமுறை, மஹிந்தவிடம் விசாரித்தேன். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. மாறாக சிறு புன்முறுவலைச் செய்துவிட்டு வேறு ஒரு விடயத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். அதன் பின்னர் நான் இது விடயமாக அவரிடம் எதையுமே கேட்கவில்லை. தன்னுடைய மனைவி மற்றும் மகளை இராணுவத்திடம் ஒப்படைத்தது, பிரபாகரன் செய்த மாபெரும் தவறாகும். இறுதி யுத்தத்தின் போது, அவர் தன் மனைவி பிள்ளைகளை தன்னுடனேயே வைத்திருப்பார் என்றே நான் நம்பியிருந்தேன். பின்னரே அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அறிந்துகொண்டேன்.
புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும், நாய்க் குட்டிகள் போன்று தங்கள் காலடியில் வந்து விழுந்ததாக இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அப்போது அறிவித்திருந்தார். அதைக் கேட்டபோது எனக்கு, புலிகளின் தலைவர்கள் தொடர்பில் கடுமையான கோபம் ஏற்பட்டது. என்னை துரோகிகள் என்று கூறியவர்கள், இராணுவத்தின் காலடியில் போய் விழுந்ததாக கேள்விபட்டபோது, கடும் கோபம் ஏற்பட்டது' என்று அவர் அந்த செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவும் எவ்வளவு கொடுரமானவர்கள் என்பதும் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்கு தெரிந்தது. நாட்டின் விடுதலைக்காக போராடிய பெண் போராளிகளை இராணுவத்தினர் கொடுறமான முறையில் கற்பழித்து கொலை செய்தனர். சரணடைந்த போராளிகளைக் கொலை செய்ய வேண்டாமெனவும், அவர்கள் அப்பாவிகள் எனவும் நான்மகிந்தவிடமும் கோத்தாவிடமும் கெஞ்சியிருந்தேன். ஆனால் அவர்கள் அதனை கேட்கவில்லை. பிடிபட்ட புலித்தலைமையை அழித்தது பெரிதல்ல. ஆனால் பிரபாகரனின் மனைவிக்கும் மகளுக்கும் நடந்த சம்பவம்தான் எனக்குப் பொறுக்க முடியாது இருந்தது. பிரபாகரினின் இளைய மகனைக் கொல்ல வேண்டாம் என நான் கூறிய போதும் அவனும் கொல்லப்பட்டான். அரசாங்கம் புலிகளுடன் செய்த யுத்தத்தில் அரசாங்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக நானே இருந்தேன். யுத்தம் முடிந்து சில வாரங்களில் கோத்தபாய எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். ‘உமக்கு சிங்கள மக்கள் கடன் பட்டிருக்கின்றார்கள்’ எனவும் தெரிவித்தார்.
எனினும் அவர்கள் என்னை இப்போது மறந்து விட்டனர். எனக்கு இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்காமல் என்னை புறக்கணித்துள்ளனர்."
-கருணா
# கருணா பிரிந்தபோது அந்த செய்தி பொய்யாக இருக்காத என கலங்கிய பலரில் நானும் ஒருவன். ஒரு காலத்தில் கருணாவை தமிழ் மக்கள் அந்தளவுக்கு நேசித்தனர். சிங்கள அரசுக்கு துணைபோனதன் காரணமாக தமிழீழ போராட்ட வரலாற்றில் மிகப் பெரும் துரோகம் இழைத்தவராக கருதப்பட்டவர். சொந்த நலன்களுக்காக பேரினவாத்திற்கு - அதிகாரத்திற்குத் துணைபோய் சொந்த சனங்களுக்குத் துரோகம் இழைப்பவர்களுக்கு கருணாவின் வீழ்ச்சி தக்கபாடம்!

Post a Comment

 
Top